கொடுத்த கடனை தாய் திருப்பி செலுத்த முடியாததால், கடன் பணத்திற்கு பதிலாக 16 வயது மகளை திருமணம் செய்த நபர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த காந்தி கண்ணன் என்ற 33 வயதுடைய நபருக்கும் செந்தில்குமார் - ராஜலட்சுமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) குடும்பத்தினருக்கும் பழக்கம் இருந்துள்ளது. செந்தில்குமார் பல இடங்களில் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் உயிரிழந்தார். அதனால் கடனை அடைக்கும் பொறுப்பு அவரது மனைவி ராஜலட்சுமிக்கு வந்தது. ராஜலட்சுமி, ஏற்கனவே மகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டதால், அவராலும் திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், கடனை அடைக்க ராஜலட்சுமிக்கு காந்தி கண்ணன் பண உதவி செய்துள்ளார். ராஜலட்சுமியால் காந்தி கண்ணனுக்கு மீண்டும் பணம் கொடுக்க இயலவில்லை. அதனால், ராஜலட்சுமியின் நிலையை பயன்படுத்திக்கொண்ட காந்தி கண்ணன், பணத்திற்கு பதிலாக அவரது மகளான 16 வயது சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். 

முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜலட்சுமி, பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது. 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்த விஷயம் தொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார், காந்தி கண்ணன், சிறுமியின் தாய் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சிறுமியை கோட்டை பகுதியில் உள்ள காப்பகத்தில் போலீசார் தங்கவைத்துள்ளனர். 

ஏழ்மையை பயன்படுத்தி கடன் கொடுத்து அதன்மூலம் ஒரு நபர், சிறுமியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.