முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்… விவசாயிகள் பயன்பெறுவது எப்படி? முழு விவரம் உள்ளே!!

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

chief ministers solar pumpsets scheme and here the details that how farmers to avail that

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண் பெருமக்களின் நலனுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, வேளாண் மின் இணைப்பு வேண்டி பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளின் வசதிக்காக கடந்த ஆண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டிலும் மேலும் அதிக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டம்: 

கடந்த 2021-22 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிணற்றுப்பாசனத்திற்கு மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், சூரிய சக்தி அதிக அளவில் கிடைக்கும் நம் மாநிலத்தில், அதனை மின் சக்தியாக மாற்றி வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்திட முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மின்கட்டமைப்புடன் சாராத, தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்புசெட்டுகள் 70 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

திட்டத்தின் நோக்கமும், பயனும்:  

வருடத்தில் அதிக நாட்கள் சூரிய வெளிச்சம் அபரிமிதமாகக் கிடைக்கும் நம் மாநிலத்தில், சூரிய சக்தியை வேளாண் பணிகளுக்கு திறம்பட பயன்படுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் பகலில் 6 முதல் 8 மணி நேரம் வரை தடையற்ற மின்சாரத்தை பெற்று, அதன் மூலம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை எளிதாக மேற்கொள்ள இயலும். 

மானிய விபரம்: 

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மின் கட்டமைப்புடன் சாராத, சூரிய சக்தியால் தனித்து இயங்கும் பம்புசெட்டுகள் 70 சதவிகித மானியத்தில் நிறுவப்படும். 

AC / DC நீர்மூழ்கி பம்பு செட்டுகளுக்கான சராசரி விலை மற்றும் மானிய விவரம்:

ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம். ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவிகித  மானியத்துடன் கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். இதனால், இப்பிரிவினைச் சார்ந்த விவசாயிகளின் பங்களிப்புத் தொகை வெகுவாக குறையும். 

சூரிய சக்தி பம்ப்செட்டு நிறுவியபின் கிடைக்கும் கூடுதல் வசதிகள்: 

இத்திட்டத்தின் கீழ் நிறுவப்படும் சூரிய சக்தியால் தனித்து இயங்கும்  AC மற்றும் DC பம்பு செட்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பராமரிப்பு செய்வதுடன், காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். 

சூரிய சக்தி பம்பு செட்டை மானியத்தில் பெறுவதற்கான தகுதி:

ஏற்கனவே கிணறு அமைத்து, மின் இணைப்பு இல்லாமல் டீசல் என்ஜின் மூலம் பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளாக இருக்க வேண்டும். புதிதாக கிணறு அமைக்கும்பட்சத்தில், அரசு வரையறுத்துள்ள நிலநீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் (Safe Firka) மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அனுமதிக்கப்படும். சூரிய சக்தி பம்பு செட்டை நிறுவியபின், நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து பாசனம் மேற்கொள்வதற்கு விவசாயி உறுதிமொழி அளித்திட வேண்டும். 

இலவச மின் இணைப்புக்கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், தங்கள் மூதுரிமையின்படி, இலவச  மின் இணைப்பு பெறும்போது, சூரிய சக்தி பம்பு செட்டை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மதக் கடிதத்தை வழங்க வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https;//pmkusum.tn.gov.in அல்லது https;//aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ  விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (அல்லது) மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நேரிலும் விண்ணப்பிக்கலாம். 

தேவைப்படும் ஆவணங்கள்:

  • ஆதார் அட்டையின் நகல் 
  • புகைப்படம் 
  • சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல் 
  • ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளாக இருந்தால், சாதிச் சான்றிதழ் மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் நகல்.

தொலைவாக நிலமுள்ள இடங்களில் மின்தொடர்பே இல்லாமல் பாசனத்திற்காக டீசல் என்ஜினுக்கு அதிகம் செலவு செய்து வரும் விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப்செட்டு ஒரு வரப்பிரசாதமாகும்.  விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தில் அதிக விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு, வேளாண் பெருமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios