கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அதிகபட்சம் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 34 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடுகப்பட்டி, ஜெயமங்கலம், லெட்சுமிபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் காரணமாக குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.