சென்னை மழைநீர் பெருக்கு  காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நிலவரம் குறித்து சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக கனமழை பெய்து கொட்டியது. தென் மாவட்டங்களிலும், டெல்டா, கொங்கு மண்டல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கடந்த மாதம் சென்னையில் பேய்மழை கொட்டி தீர்த்தது. சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி பலத்த கன மழை பெய்தது. சென்னையில் எங்கு திரும்பினாலும் வெள்ளகாடாக காட்சியளித்தது.

சென்னையின் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. சில பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநில போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். 

இதனால் பல நாட்களுக்கு சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு இன்று சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரத்தை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது. 

மழைநீர் பெருக்கு காரணமாக மெட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் கேகே நகர் ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, திருமலைப்பிள்ளை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மெதுவாக செல்கின்றன. மாநகரப் பேருந்து போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா மருத்துவமனை ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்க பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. வாகனங்களில் செல்லும் பொது மக்கள் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.