Asianet News TamilAsianet News Tamil

அச்சுறுத்தும் வானிலை… மீண்டும் கனமழையா? விளக்கும் வானிலை ஆய்வு மையம்!! | Tamilnadu Rain

#Tamilnadu Rain | தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Chennai Meteorological Center about rain
Author
Chennai, First Published Nov 21, 2021, 5:59 PM IST

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராட்சத மோட்டர்கள் கொண்டு தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதை அடுத்து பயிர்சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கினார்.

Chennai Meteorological Center about rain

இதற்கிடையே வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்த 19 ஆம் தேதி அதிகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது. மேலும், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.வட கடேலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்திருந்தது.

Chennai Meteorological Center about rain

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த மழை குறித்து கூறுகையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் மழைக்குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், இன்னும் 5 நாட்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பெய்த மழையின் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீளாத நிலையில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பது மக்களிடையே நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios