Asianet News TamilAsianet News Tamil

கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவதை ஒழிக்க வேண்டும்… அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் கொடிய நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai highcourt directs to completely eradicate manual scavenging
Author
Chennai, First Published Nov 10, 2021, 5:57 PM IST

தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் கொடிய நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதர்கள் கழிவுகளை அகற்றுவதால் பல்வேறு நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல், தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளில் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செப்டிக் டேங்க் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்து வருகின்றனர்.

chennai highcourt directs to completely eradicate manual scavenging

இதன் காரணமாக உரிய முகக் கவசம், கையுறை இதர சாதனங்களை வழங்க வேண்டும் என்றும் கழிவுகள் அகற்றும் பணியைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கும், அப்பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாருக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் அப்பணியில் தொழிலாளர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இருதரப்புமே மிகுந்த கவனதுத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டது. கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற மனநிலையை மாற்ற வேண்டுமெனவும், அவர்கள் எந்தவொரு வேலைக்கும் செல்லலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

chennai highcourt directs to completely eradicate manual scavenging

மேலும், பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடுமையான அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தற்போது தொடரும் நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் பல இடங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி மனிதர்களை அந்த பணியில் ஈடுபடுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios