சென்னையை பொருத்தவரை நேற்று இரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. காலை 6 மணி முதலே வானம் இருண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நேற்று இரவு முதலே பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலைக்கு மாறி உள்ளது. இதனால் சென்னை ஊட்டியாக மாறிவிட்டதாக மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் கொடுமையிலிருந்து முழுமையாக விடுபடாத சென்னை மக்கள் இனி வெயிலின் தாக்கம் இருக்காது என்ற நம்பிக்கை வரும் அளவிற்கு தொடர்ந்து மிதமான மழை நிற்காமல் பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. தொடர் கனமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தான் இந்த மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் வட தமிழகம் கடலோர மாவட்டங்களில் நாளை இரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் மிதமான மழையால் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. இதேபோன்று தொடர்ந்து மழை பெய்தால் குளிர்ச்சி அடைந்த பூமியில் தண்ணீர் அதிக அளவு தேங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.