காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் கர்நாடகவும், மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டை மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. இதையடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று மத்திய அரசு தரப்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரைவு திட்டத்தினை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இதன் வழக்கு விசாரணை மே 16 ஆம் தேதிக்கு அதாவது இன்று ஒத்திவைத்தது. 

இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு தொடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயர் என்பதில் முக்கியமான விஷயமில்லை அதிகாரம் என்பதுதான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க மத்திய அரசும், கர்நாடகவும் ஒப்புதல் அளித்தது. 

காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்பின் அதிகாரம் மத்திய அரசுக்கு பதில் புதிய அமைப்பிடம் அதிகாரம் இருக்க வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது. காவிரியில் இருந்து நீர் திறக்கும் அதிகாரம் காவிரி அமைப்பிடமே இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியது. தண்ணீர் திறக்கும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு உண்டு என்றும் அது குறித்த திருத்தத்தை செய்து நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.