ஏற்கனவே மனைவி இருக்கும்போது, தம்பிக்கு 2வது திருமணம் செய்து வைத்த முன்னாள் பெண் மத்திய அமைச்சர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் காஞ்சனா தேவி (28). கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி, சென்னை மாநகர கமிஷனரிடம், காஞ்சனா தேவி ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை என்என் கார்டன் 6வது தெருவை சேர்ந்த முத்துக்குமரன் (33) என்பவரும், நானும் காதலித்து, 1-11-2014ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டோம். பின்னர், இரு வீட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் 22-4-2015ம் அன்று, சென்னை வடபழனி முருகன் கோயிலில் முறைப்படி திருமணம் செய்து கொண்டேம்.

பின்னர், கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் முத்துகுமரனுக்கு, பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதை நான் தட்டிக் கேட்டதால், என்னை அடித்து துன்புறுத்தினார். பின்னர், என்னை தகாத வார்த்தையால் திட்டி வீட்டை விட்டு விரட்டினர். இதையடுத்து நான், எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

அந்த நேரத்தில், 17-7-2018 அன்று, எனது கணவருக்கு, அவரது தாய் தங்கபுஷ்பம், சகோதரி முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

முதல் மனைவி இருக்கும்போது, 2வது செய்த கணவர் முத்துகுமரன், அவரது சகோதரி ராதிகாசெல்வி, தாய் தங்கபுஷ்பம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புகாரின்படி, சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தினார்.

அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார், கடந்த அக்டோபர் 20ம் தேதி, முத்துகுமரன் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரது தாய், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதையடுத்து, ராதிகா செல்வி மற்றும் தங்கபுஷ்பம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மேற்கண்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி உத்தரவிட்டது.

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று காலை ராதிகா செல்வி, அவரது தாய் தங்கபுஷ்பம் ஆகியோர் மீது, முதல் மனைவி இருக்கும்போது 2வது திருமணம் செய்தது. இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.