சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேர்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உடல்கருகி உயிரிழந்தந்தை அடுத்து உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் நேர்ந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உடல்கருகி உயிரிழந்தந்தை அடுத்து உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து நேர்ந்தது. வெடிமருந்து தயாரிக்கும் பணியின் போது தீப்பற்றி வெடிவிபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பட்டாசு தயாரிக்கும் அறைகளில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் 7 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின.

தகவல் அறிந்து சிவகாசியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தியதுடன், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடிவிபத்தில் குமார், பெரியசாமி, செல்வம் ஆகியோர் உட்படத் தொழிலாளர்கள் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கோபாலகிருஷ்ணன், முனியாண்டி, காளியப்பன், அழகர்சாமி, முருகேசன் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன் நிகழ்விடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். புத்தாண்டு நாளில் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்காமல் உற்பத்தியில் ஈடுபட்ட நிலையில் வெடிவிபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
