தெற்கு வங்கக்கடலில் உருவான ஃபனி புயல் இன்று தமிழக கரையைக் கடக்கும் என  கடந்த வாரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் ஃபனி புயல் திசை மாறி ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் தாக்கம் தமிழகம் வரை எதிரொலித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தைலாபுரம் மற்றும் வானுரில்  மாலையில் இருந்தே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் 4 கார்கள் சேதமாகியது.

இதே போல் கடலூரில் இரவு 7 மணிக்கு மேல் கடும் சூறாவளி காற்று வீச தொடங்கியது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக காற்று மழையுடன் கடும் சூறாவளி வீசியது. கடல் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்பட்டது.

காற்றுடன் கூடிய கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர், அரியங்குப்பம், காலாப்பேட் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததுது . ஃபனி புயல் தாக்கம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே வானிலைஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.