திருச்சி 

திருச்சியில் புதிய வெங்காய மண்டியில் வேலை கேட்டு வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நள்ளிரவு வரை குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி மாவட்டம், காந்திசந்தை அருகே துணை சிறைச்சாலை சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வெங்காய மண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய பால்பண்ணை அருகே புதிதாக கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் துணை சிறைச்சாலை சாலையில் இருந்த வெங்காயமண்டியில் ஏற்கனவே பணியாற்றி வந்த சுமை தூக்கும் தொழிலாளர்களையே புதிய வெங்காய மண்டியில் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று வியாபாரிகளிடம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். 

ஆனால் வியாபாரிகளோ, "ஏற்கனவே பணியாற்றி வந்த தொழிலாளர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை தர முடியும்" என்றும், "அவ்வாறு வேலைக்கு வருபவர்களும் சங்கம் வைத்து கொண்டு வேலை நிறுத்தம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது" என்றும் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர். 

இதனால் வியாபாரிகள் தரப்பினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பலர், "புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி பழைய பால்பண்ணை அருகே புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட சென்றனர். 

இது குறித்து அறிந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி 117 பேரை கைது செய்தனர். "காவலாளர்களின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், புதிய வெங்காய மண்டியில் ஏற்கனவே பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கக் கோரியும்" சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று காலை திரண்டு வந்தனர். 

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் துணை சிறைச்சாலை சாலையில் பழைய வெங்காய மண்டி செயல்பட்ட இடத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். 

வெங்காய மண்டி தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் என சுமார் 300–க்கும் மேற்பட்டவர்கள் சாலையோரம் அமர்ந்திருந்தனர். புதிய வெங்காய மண்டியில் 276 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த வித நிபந்தனையுமின்றி வேலை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் இந்த இடத்தை விட்ட போக மாட்டோம். 

புதிய வெங்காய மண்டியில் சங்கத்தை சேராத தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி காவல் ஆணையர் பெரியண்ணன், திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய தொழிற்சங்க தலைவர்களான ராமலிங்கம் (தொ.மு.ச), ராஜா (சி.ஐ.டி.யு) ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. ஒரு கட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் புதிய வெங்காய மண்டியை முற்றுகையிட போவதாக கூறி ஆவேசமாக கிளம்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.

காவல் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம், இந்த பிரச்சினை பற்றி நாளை (அதாவது இன்று) காலை மாநகர காவல் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம். அதுவரை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய தொழிலாளர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.