விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சகதி வீசிய வழக்கில் பாஜக பிரமுகர் விஜயராணி கைது செய்யப்பட்டுள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பொதுமக்கள் போராட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் ஒன்று விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சுந்தரேசபுரம், சித்தலிங்கமடம், டி.எடையார், திருவெண்ணெய்நல்லூர், தொட்டிக்குடிசை, சின்னசெவலை, மழவராயனூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக நிர்வாகி

தங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட தரவில்லையெனவும், உணவு வழங்கவில்லையெனவும் கூறினர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த ஒரு சிலர் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது சகதியை வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த இடத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த நிலையில் சகதியை வீசியவர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் பாஜக நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி எடுத்த குடும்பத்தினரை தேடித்தேடி கைது செய்யும் காவல்துறை !!

பாஜக பெண் நிர்வாகி கைது

இதில் தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கைது செய்திருந்தனர். இந்த நிலையில் அமைச்சர் மீது சகதியை வீசிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் துணை தலைவி விஜயராணியை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகரான விஜயராணி, 4 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதனிடையே விஜயராணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் காவல்நிலையத்தில் கூடி வருகிறார்கள்.