கடந்த  ஜனவரி 1 ஆம் தேதி முதல்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்தது. மேலும்  பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த குழுவினர், இதுவரை, 264 டன் பிளாஸ்டிக் பொருட்களையும், அதை பயன்படுத்தியவர் களிடம் இருந்து, 42 லட்சம் ரூபாய்க்கு மேல், அபராதமும் வசூலித்துள்ளனர். 

ஆனாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்காததால், வியாபாரிகள் அத்துமீறுவது தொடர்ந்து நடைபெறுகிறது. 

இந்நிலையில், 'தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அரசு வகுத்துள்ள வழிமுறைகளின் படி, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

அதன்படி, கடைகளுக்கு, 'சீல்' வைக்கவும், பொதுமக்கள், வீடுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கவும், மாநகராட்சி அதிரடியாக முடிவு செய்துள்ளது. 

அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வீடுகளில் பயன்படுத்தினால், முதல் முறை பிடிப்படும் போது, 500 ரூபாய், அடுத்த முறைகளில், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.