மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் சுமார் 900 காளைகள் பங்கேற்றுள்ளன.

காளைகளை அடக்குவதற்கு சுமார் 800 வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்கும் வீரருக்கும், காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 

இன்றைய ஜல்லிக்கட்டில் பெரும்பாலான பரிசுகள் காளை வளர்ப்போருக்கு சென்ற வண்ணம் உள்ளன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் மிரட்டி வருகிறது.

காளைகளை அடக்க முயன்று காயமடைந்த வீரர்களுக்கு, அங்குள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அவ்வகையில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த ஒரு வீரருக்கு, மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.