இந்த புயல் சின்னம் குறித்து  INCOIS  என்ற இந்திய தேசிய கடற்கரைசார் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், வங்கக் கடலில் வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நாளை மாலை மாலை 5.30 முதல் 16-ம் தேதி இரவு 11.30 வரையிலான காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் மணிக்கு 75 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் பழவேற்காடு வரையிலான கடலோரப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். அதன் காரணமாக கடலோரப் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 4.5 மீட்டர் உயரம் வரை அலை எழும்பக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதையடுத்து இன்று முதலே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையமும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி அடுத்த  72 மணி நேரத்தில் வடதமிழகம், ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை மாறிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே போல் தனியார் வானிலை ஆர்வலரான செல்வகுமார்,  பெய்டி புயலின்போது எழும்பும் பேரலைகளால் கரைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையக்கூடும் என்றும், கடலோர குடியிருப்புகளில் தண்ணீர் புகும் என்றும், கடலரிப்பு அதிகமாக இருக்கக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தப் புயல் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கரையை நெருங்கும். அங்கிருந்து கடலோரமாகவே நகர்ந்து செல்லும். அப்போது புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதியில் இருந்து 100 கிமீ தொலைவில் கடலில் இருக்கும். மையப் பகுதியில் மணிக்கு சுமார் 250 கிமீ வேகத்தில் மிக பலத்த காற்று வீசும். கரையோரப் பகுதிகளை புயலின் வெளிப்பகுதிதான் தொட்டுச் செல்லும் என்பதால், கரையோரங்களில் சுமார் 100 கிமீ வேக அளவில் காற்று வீசும். பழவேற்காடு, எண்ணூர், ஸ்ரீ ஹரிகோட்டா ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் சுமார் 120 கிமீ வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்..

பெய்டி  புயலால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இது குறித்து பேட்டி அளித்தார். அதில் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தம் தொடர்பாக, பல்வேறு செய்திகளை ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர்.

இந்தச் செய்திகள் எல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறது. டிசம்பர் 15  மற்றும் 16 தேதிகளில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யலாம் என்கிற எச்சரிக்கையும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 32 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.