பேரைச் சொன்னாலே ச்ச்சும்மா கிளுகிளுன்னு இருக்கும் இடங்களில் மிக முக்கியமானது ‘மசாஜ் சென்டர்’. அது என்னமோ தெரியலை, ஏன் அப்படின்னே புரியலை இந்த ஃபீலிங் எல்லோருக்குமே தொடர்ந்துட்டே இருக்குது. அது தவறான உணர்வு என்று ஆழ் மனசுக்கு புரிந்தாலும் கூட அரைவேக்காடு மேல் மனசு என்னமோ மசாஜ் சென்டர்களை தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்க்கிறது. 

இந்நிலையில், மசாஜ் செண்டர்களில் ரெய்டு எனும் பெயரில் தொந்தரவு செய்வதாக புஷ்பா எனும் பெண் வழக்கே தொடர்ந்துவிட்டார். கோயமுத்தூரை சேர்ந்த புஷ்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் அந்த வழக்கில் “நான் கோயமுத்தூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறேன். இங்கு, கேரளாவின் பாரம்பரிய ஆயுர்வேத சிசிச்சை அடிப்படையில் மசாஜ் செய்யப்படுகிறது. இதனால்,உடலில் உள்ள பல நோய்கள் குணமடைகின்றன. 

ரத்த நாளங்கள் சரியாகி, ரத்த ஓட்டம் சீராகிறது. ஆனால் தேவையில்லாமல் போலீசார் இது போன்ற பாரம்பரிய மசாஜ் செண்டரில் சோதனை நடத்துகின்றனர். 2014ஆம் ஆண்டு ‘மசாஜ் செண்டரில் தேவையில்லாமல், அடிப்படை முகாந்திரம் இல்லாமல் சோதனை செய்யக்கூடாது’ என்று அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் தீர்ப்பு அளித்துள்ளார். 

எனவே தேவையில்லாமல் மசாஜ் தொழிலில் தலையிடக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.” என்று கூறியுள்ளார். மசாஜ் சென்டரை நேர்மையுடன் நடத்திடுவதால்தானே இந்தப் பெண் இவ்வளவு துணிந்து வழக்கே தொடுத்துள்ளார்? என்று யோசித்திருக்கிறது உயர்நீதிமன்றம். 
இந்நிலையில் புஷ்பாவின் வழக்கை விசாரித்த நீதிபதி “நீதிமன்றம் ஏற்கனவே இரண்டு முறை உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவுகளின் அடிப்படையில், மசாஜ் செண்டரில் எப்போது, எந்த சூழ்நிலையில் போலீஸார் சோதனை நடத்தலாம்! என்று வரையறை செய்து, தமிழக டி.ஜி.பி. ஒரு சுற்றறிக்கையை அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பினால் என்ன?” என்று கேட்டுள்ளார். 

இதற்கு ‘அரசின் கருத்தை இதில் கேட்டு பதிலை தெரிவிக்கிறேன்.’ என்று அரசு பிளீடரும் சொல்லியுள்ளார். நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது, அதில் ஒன்றாகுமா இது?