கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீத்த்து வருகிறது. இந்த வரலாறு காணாத மழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். அரசு அமைத்த நிவாரண முகாம்களில் ஆயிரக்கணக்கானோர்தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழையால் வீடு இடிந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக வீடு இடிந்து நேற்று ஒருவர் பலியான நிலையில் கூத்துக்குளியில் 2 பேரும், நடுவட்டத்தில் 2 பேரும் இன்று உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவலாஞ்சி பகுதியில் கடந்த 24 மணி நேரம் இடைவிடாது கொட்டிய மழை புதிய வரலாறு படைத்ததுள்ளது என்றே கூற வேண்டும்.

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று முன்தினம் 82 செ.மீ. மழை பெய்ததே அதிகபட்ச அளவாக நேற்று வரை சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு புதிய வரலாறு படைத்துள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 91 செ.மீ. மழை பெய்துள்ளது

இந்நிலையில் அவலாஞ்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நீலகிரி தொகுதி எம்.பி  ஆ,ராசா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மக்களுக்கு தேவையான உணவு, உடை என அனைத்து தேவைகளும் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என அமைச்சர் அறிவித்தார்.

அவலாஞ்சியில் தொடர்ந்து மழையளவு அதிகரித்து வருவதால் பாதிப்புகள் மேலும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.