திண்டுக்கல்

ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (33). இவர் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நல்லூரில் உள்ள தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.  

பழனிசாமி தன்னுடன் வேலைபார்க்கும் செந்தில்குமாருடன் (45)  மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடுக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி மாலை சென்றுள்ளார்.  

கருமாபுரம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரேவந்த பயணிகள் ஆட்டோ, இருசக்கர வாகனத்தின்மீது வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய பழனிசாமி மற்றும் செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர்.  

ஆட்டோ ஓட்டுநரான  மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த கங்காதரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இவ்விபத்து நடந்தபோது,  ஆட்டோவின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியசாமி என்பவர் ஆட்டோ மீது மோதி காயமடைந்தார். 

பின்னர் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பழனிசாமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  

காயமடைந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த செந்தில்குமார் நேற்று உயிரிழந்தார்.  

இந்த விபத்து குறித்து தாலுகா காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.