அத்திவரதர் வைபவம் தொடங்கி இன்று 37வது நாளாக நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் .அத்திவரதர் இன்று ஏலக்காய் மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சகஸ்ரநாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

பெருமாளுக்கு உகந்த கருட பஞ்சமி தினமான நேற்று காஞ்சிபுரம் நகரம் முழுவதுமே கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காணப்பட்டது. நேற்று நகரப் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துப் போலீஸார் கோயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

அதே நிலைதான் இன்றும் நீடிக்கிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் நகருக்குள் அனுமதிக்க போலீஸார் மறுத்ததால் வாகனங்கள் நகருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால் வெளியூரிலிருந்து வாகனங்களில் வந்தவர்கள் நீண்ட தூரம் நடந்து கோயில் அருகே வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கோயில் மாட வீதிகள், திருக்கச்சிநம்பி தெரு, செட்டி தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, அமுதப்படித்தெரு,  அஸ்தகிரி தெரு ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

காவல்துறையின் தடுப்புகளையும் தாண்டி மக்கள் வரிசைகளுக்குள் நுழைந்தனர். இதனால் பல இடங்களில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

செவ்வாய்க்கிழமையான இன்று மதியம் 3 மணியளவில் 1.90 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 1.50 லட்சம் பேர் கோவிலைச் சுற்றி சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் காஞ்சிபுரம் நகரத்துக்குள் வர முடியாமல், தவித்து வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் இருந்து கோயிலுக்கு வரும் அனைத்து சாலைகளும் சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் அத்திவரதரை தரிசிக்க வந்த சுமார் 50 ஆயிரம் பேர் நகருக்கு வெளியே தவித்து வருகிறார்கள்.