40 ஆண்டுகளுக்குப் பிறகு  காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்தி வரதர் கடந்த ஜுலை 1 ஆம் தேதி முதல் பொது மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளார். ஜுலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சயன கோல்த்தில் காட்சி தந்த அத்தி வரதர் தற்போது நின்ற நிலையில் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். கடந்த 2 நாட்களாக அத்தி வரதரை தரிசிக்க கூட்டம் கட்டுக்கடங்காமல் வருகிறது.

இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி மால் 5 மணியுடன் அத்தி வரதர் தரிசனம் நிறுத்தப்படும் என்று காஞ்சி மாவ்ட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதியம் 12 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் பொது தரிசனப் பாதையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வரும்  16 மற்றும் 17-ஆம் தேதி முக்கிய பிரமுகர்கள் தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறினார்.
12 மணிக்குள்  கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மாலை 5 மணி வரையிலும் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ஆகம விதிகளின்படி அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார். 

இதனிடையே நேற்று அதிகாலை முதல் மதியம் 4 மணி வரை 3.50 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்கள் மேற்கு கோபுரம் வழியாக விரைந்து வெளியேறும் வகையில் அப்பாதை விரிவுபடுத்தப்படும். ஆகஸ்ட் .16-ஆம் தேதி காஞ்சிபுரம் நகரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அத்திவரதரை தரிசிக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரவு 11 மணி வரை இருந்த தரிசன நேரம் இனி வரும் நாள்களில் பக்தர்களின் கூட்டத்தைப் பொறுத்து இரவு 2 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.