திருவாண்ணாமலை மாவட்டம் கீழ் பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன் –பூங்காவனம் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த இருவரையும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தனர்.

மகன்கள் இருவரும் மனைவி, குழந்தைகளுடன் அதே ஊரில் வசித்து வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் – பூங்காவனம் தம்பதியினர் தங்களிடம் இருந்த 5 ஏக்கர் நிலத்தை சமமாக பிரித்து தங்கள் மகன்கள் பேரில் எழுதி வைத்தனர்.

ஆனால் சொத்து கைக்கு வந்த பின் மகன்களின் போக்கு மாறியது. பெற்றோரர்களை கவனிக்காமல் அவர்களை கைவிட்டனர். உணவு, உடை உள்ளிட்ட எதுவும் வழங்காமல் அவர்கைளை வீட்டை விட்டு துரத்தி அடித்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக பெரும் துன்பத்துக்கு ஆளான கண்ணன்  பூங்காவனர் தம்பதியினர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் அளித்தனர்.

இதனை உடனடியாக விசாரித்த மாவட்ட ஆட்சியர், மகன்கள் பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்தார். அந்த நிலத்தை மீண்டும் கண்ணன்- பூங்காவனம் தம்பதிகளின் பெயருக்கே பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து அந்த பத்திரத்தை கண்ணன் – பூங்காவனம் தம்பதிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தொடர்ந்து அவர்களுக்கு அந்த நிலத்தில் விவசாயம் பண்ண கடன் உள்ளிட்டவற்றை வழங்கி உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் இந்த செயலைப் பாராட்டிய பொது மக்கள், பெற்றோரை ஏமாற்றி, உணவளிக்காமல் தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு இரு ஒரு பாடமாக அமையும் என தெரிவித்தனர்.