Asianet News TamilAsianet News Tamil

ரூ.35 இலட்சம் இழப்பீடு தொகையை மோசடி செய்தவர் கைது; துபாயில் இருந்து வந்தவர் சிறையில் அடைப்பு...

Arrested for cheating Rs 35 lakh compensation Arrested in Dubai
Arrested for cheating Rs 35 lakh compensation Arrested in Dubai
Author
First Published May 16, 2018, 10:54 AM IST


விழுப்புரம்
 
துபாயில் இறந்த தொழிலாளிக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகை ரூ.35 இலட்சத்தை அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையம் அருகே காரனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ஐயம்பெருமாள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 2008-ல் பணியின்போது உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அப்போது துபாயில் ஐயம்பெருமாளுடன் வேலை பார்த்துவந்த சங்கராபுரம் தாலுகா கடுவனூரைச் சேர்ந்த ஐயனார் மகன் பவுன்குமார் (36) என்பவர், ஐயம்பெருமாளின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் இறந்த சம்பவம் பற்றி தெரிவித்தார்.

மேலும் ஐயம்பெருமாளின் உடலை துபாய் நிறுவனத்தின் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், ஐயம்பெருமாளின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காமல் அங்கேயே தகனம் செய்துவிட்டு அவரது அஸ்தியை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இதைவைத்து ஐயம்பெருமாளின் பெற்றோர் ஈமச்சடங்கு செய்தனர்.

பின்னர் ஐயம்பெருமாளின் தந்தை சின்னத்தம்பி, பௌன்குமாரை தொடர்பு கொண்டு தனது மகன் பணிபுரிந்து வந்த நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையை பெற்றுத்தரும்படி கேட்டார். அதற்காக சின்னத்தம்பி, ஒரு மனுவையும் தபால் மூலம் பௌன்குமாருக்கு அனுப்பி வைத்தார்.

இதன்மூலம் பௌன்குமார், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சென்று இழப்பீட்டு தொகையாக ரூ.35 இலட்சத்தை பெற்றார். ஆனால், இந்த தொகையை ஐயம்பெருமாளின் பெற்றோருக்கு கொடுக்காமல் பௌன்குமார் மோசடி செய்து விட்டார். 

இழப்பீட்டு தொகையை தரும்படி பௌன்குமாரிடம் சின்னத்தம்பி கேட்டதற்கு பணத்தை கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சின்னத்தம்பி, இதுபற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலார்களிடம் புகார் கொடுத்தார். 

அந்த புகாரின்பேரில் பௌன்குமார் மீது காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், அண்ணாத்துரை மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து கடுவனூருக்கு பௌன்குமார் வந்ததை அறிந்த மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் நேற்று முன்தினம் இரவு கடுவனூருக்கு விரைந்து சென்று பௌன்குமாரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

பின்னர் அவரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் காவலாளர்கள் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios