தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. 

தஞ்சையில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா வளாகத்திலிருந்த விதிமீறல் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுதர்சன சபா உள்ளது. இந்த சபா, கடந்த 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. திமுக பிரமுகர் ஒருவர், இந்த சபாவை குத்தகைக்கு எடுத்து இருந்தார். 

இந்நிலையில் சபா வளாகத்தில் குத்தகை விதிமுறையை மீறி மதுபான கூடம், பேக்கரி கடை, செல்போன் கடை, உணவகம் ஆகியவை கட்டப்பட்டு, உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. நகர ஊரமைப்பு சட்டம் 1971 விதிகளின்படி, உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டு உள்வாடகைக்கு விடப்பட்டிருந்த உணவகம், மதுபான கூடம், பேக்கரி, செல்போன் கடை ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூட்டி சீல் வைத்தனர்.

பின்னர் குத்தகை விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுக பிரமுகர் வசம் இருந்த சுதர்சன சபாவை ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1975-ன் படி மாநகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்தினர். மாநகராட்சி அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்ட சுதர்சன சபாவின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் மாநகராட்சிக்கு குத்தகை நிலுவை தொகை ரூ.20 கோடி வரை பாக்கி செலுத்த வேண்டியிருந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில் இன்று ஆட்சியர் தலைமையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போலீஸ் எஸ்.பி. ரவளிபிரியா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் சுதர்சன சபாவில் இருந்த மதுபானக் கூடம் ,உணவகம், செல்போன் கடை , பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளது. சுதர்சன சபாவில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.