தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை தரவுகள்  ஏப்ரல் மாதம் 2018ல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசு குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   மத்திய மாசு  கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று சோதனை திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால்  இயக்கப்பட்டு வரும் மூன்று நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள்  இதை உறுதிசெய்துள்ளன. 

20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆலைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2018-ஆம் ஆண்டு இந்த ஆலையை மூட கோரி ஏராளமான போராட்டங்கள் நடந்தன. மார்ச் மாதத்தில் நடந்த போராட்டம் நாடு முழுவதிலும் பலரின் கவனத்தை ஈர்த்தது. மிகவும் முக்கிய நிகழ்வாக மே மாதம் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசால் ஆலை மூடப்பட்டது. 2018 மே மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில். 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தேசிய காற்று சோதனை  திட்ட தரவுகளின் படி  ஸ்டெர்லைட் இருக்கும் சிப்காட் தொழில் வளாகத்தில் ஆரோக்கியமற்ற காற்று வீசும் நாட்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு பிறகு பாதிக்கு பாதி குறைந்திருப்பதாக தெரிகிறது.
 ஏப்ரல் 2017 தொடங்கி மார்ச் 2018 வரையில் - அதாவது ஸ்டெர்லைட் இயங்கிய வரையில் - காற்றின் தரம் 56 சதவிகிதம் குடுத்தலாக ஆரோக்கியமற்று இருந்திருக்கிறது. ஏப்ரல் 2018 தொடங்கி மார்ச் 2019 வரை இந்த அளவு 27 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இதே இரண்டு காலகட்டங்களில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில்  காற்றின் அளவு இருந்த நாட்கள் 44 சதவிகிதத்திலிருந்து ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு 73 சதவிகிதமாக அதிகரித்தருக்கிறது.