சொல்ல சொல்ல கேட்காத அதிமுகவினர்..! பள்ளி மேடையிலேயே நடந்த பரபரப்பு சண்டை காட்சிகள் ..! 

சென்னை செங்குன்றத்தில் அரசு பள்ளி ஒன்றில் நடந்த விழாவின்போது அதிமுகவினர் ஆசிரியர்களிடம் தகராறு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை செங்குன்றத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.

லயன்ஸ் கிளப் சார்பில் கட்டப்பட்ட இந்த வகுப்பறையின் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. அப்போது மாணவர்கள் மத்தியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் எதற்காக அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய பயன்பாடு என்ன, மாணவர்கள் எப்படி அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை விழாவிற்கு வருகை புரிந்த லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அங்கே வந்த அதிமுகவினர் தங்களை ஏன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என கேட்டு மேடையிலேயே சப்தம் போட்டனர்.

அப்போது ஆசிரியருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது என்ன செய்வது என்று புரியாமல் திணறிய மற்ற ஆசிரியர்கள் வேறுவழியில்லாமல் அவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டனர்.

மேலும், விழாவை நடத்த விடுங்கள்.. எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த விழா நடக்க வேண்டுமென கோரி, தங்களை விழாவிற்கு அழைக்காததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம் என கையெடுத்து கும்பிட்டனர் ஆசிரியர்கள். இருப்பினும் அதிமுகவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இந்த நிகழ்வால் விழாவின் நடுவே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.