இத்தனை கோடி வசூலா..? மாஸ்க் மறக்காம போடுங்க.. இல்லை அபராதம் தான்..
தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதம் ரூ.200 என்பதில் இருந்து ரூ.500 என அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காலத்தில் தொற்று பரவல் அதிகரிக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான் வேகமாக பரவும் நிலையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கட்டாயம் முகக் கவசம் அணிந்தால், நோய் பரவலின் தீவிர தன்மை குறையும். விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறினார் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் குறைந்து இருந்த நோய் பரவல் தற்போது அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவற்றை விதித்துள்ளது.
அரசின் இத்தகைய கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது காவல்துறையினர் தக்க நடிவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதாக 1.64 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாததற்காக 1910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.