"ரெண்டு வருஷமா மதம் மாறச்சொல்லி துன்புறுத்தினாங்க.." கொந்தளிக்கும் தஞ்சை மாணவியின் பெற்றோர்
தஞ்சை அருகிலுள்ள மைக்கேல்பட்டி செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி, 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விடுதி வார்டன் சகாயமேரி, மாணவியை இரண்டு ஆண்டுகளாக மதம் மாறக்கூறி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் விடுதியிலுள்ள அனைத்து அறைகளையும் மாணவியை வைத்து சுத்தம்செய்யக்கூறி துன்புறுத்தியதாகவும் அதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுசம்பந்தமாக மாணவிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் பாஜக , இந்து முன்னணி போன்ற கட்சியினர் மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் கட்டாய மதமாற்ற முயற்சிதான். உடனே நிர்வாகிகளைக் கைதுசெய்து பள்ளி மற்றும் விடுதியை இழுத்துமூடவேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சிகிச்சையின்போது மாணவி அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.
தற்போது மாணவியின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார். மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் தங்கள் மகள் இறந்து விட்டதாக மாணவியின் பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் வைத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் நேற்று மாலை 5.30 மணிக்கு விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை இரவு 7.15 மணி வரை நடந்தது.
விசாரணை முடிந்ததும் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் சித்தி மற்றும் தந்தை, ‘எங்க பொண்ணை கட்டாயமா மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி இருக்காங்க.பாத்ரூம் கழுவுறதுன்னு ரொம்ப துன்புறுத்திட்டாங்க. எங்க பொண்ணுக்கு நியாயம் வேணும். சம்பந்தப்பட்ட ரெண்டு பேரையும் அர்ரெஸ்ட் பண்ணாதான், நாங்க உடலை வாங்குவோம். எங்க பொண்ணுக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்கக்கூடாது. எங்க பொண்ணு தான் முதலும், முடிவா இருக்கணும். வேற எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி அநியாயம் நடக்கவே கூடாது. கடந்த 2 வருடமாக இந்த கொடுமை நடந்துருக்கு. மதமாற சொன்ன ராக்லின் மேரி, சகாயமேரி இருவரையும் கைது செய்யனும்’ என்று கூறினார்கள். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா, ‘முதற்கட்ட விசாரணையில் மாணவியை மதம் மாறுமாறு வற்புறுத்தியதாக எந்தவொரு குற்றச்சாட்டும் கிடைக்கப்பெறவில்லை. மாணவி உயிரிழந்தது தொடர்பாக 305 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தரப்பில் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரிக்க உள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் மாணவியின் பெற்றோரோ மதமாற்றம் காரணமாக தான் மாணவி உயிர் இழந்ததாக கூறுகிறார்கள். தமிழக அரசு எந்தவித தயவும் பார்க்காமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக இருக்கிறது.