தென் மேற்கு பருவ மழை, இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து 26 ஆம் தேதி முதல்  வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்று  வட கிழக்கில் இருந்து, பருவ காற்று வீச தொடங்கயது, ஆனால் மழை தொடங்கவில்லை.

இந்நிலையில், பருவ காற்று வலுவடைந்துள்ளதால், இந்த வாரம், கட்டாயம் மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இதன்படி, நேற்று முதல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசான சாரல் மழை தொடங்கியுள்ளது..

வடகிழக்கு பருவ மழை, இன்று முதல் தீவிரம் அடைந்து, கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டும் என, கூறப்படுகிறது.  மேலும், நாளையும், நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

இது தொடர்பாக  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில், வட கிழக்கு பருவ மழை, நாளைக்குள் தீவிரம் அடையும்' என, கூறப்பட்டுள்ளது. 

வங்க கடலின் தென் மேற்கில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளைக்குள், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும். சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மாநிலம் முழுவதும், படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே  நாளை, ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், 11 செ.மீ., வரை மழை பெய்யும் என, மஞ்சள், 'அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தனியார் வானிலை ஆய்வு கணிப்புகளில்  திருவள்ளூர் மாவட்டத்தில், கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது