தேனி

தேனியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 61 வயது முதியவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடமிருந்து 9 சவரன் நகை மற்றும் ரூ.3 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜூன் மாதம் 30-ஆம் தேதி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியான பாலாஜி நகரில் உள்ள பரணிதரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை, ஒரு இலட்சம் ரொக்கத்தை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். 

இது தொடர்பாக வழக்குப் பதிந்த ஆண்டிபட்டி காவலாளர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஆண்டிபட்டி காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து திருடியவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் புதன்கிழமை ஆண்டிபட்டி - உசிலம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.சுப்புலாபுரம் பிரிவில் காவலாளர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவலாளர்கள் அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிபட்டி நகர் பகுதியில் இரு வேறு இடங்களில் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், அவர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்துராவுத்தர் மகன் சுலைமான் (61) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு துணிக்கடை வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதால், கரூரில் உள்ள் வேலாயுதம் பாளையத்தில் பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்து உள்ளார். 

அதன்பின்னர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட்டு இருந்தார். 

பின்னர், ஆண்டிபட்டி நகர் பகுதி சீனிவாச நகரில் மோகன் என்பவர் வீட்டில் 17 கிராம் தங்க நகை மற்றும் 1 இலட்சத்து 20 ஆயிரம், பாலாஜி நகரில் பரணிதரன் வீட்டில் 7 சவரன் தங்க நகை மற்றும் 2 இலட்சத்து 60 ஆயிரம் ஆகியவற்றை திருடி உள்ளாராம். 

அவரை திருப்பரங்குன்றம் அழைத்துச் சென்ற காவலாளர்கள் 9 சவரன் நகை மற்றும் 3.10 இலட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர், சுலைமானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.