மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு தெரிவித்தது, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் கட்டுமான பணிகள் தொடங்க தாமதம் ஏற்படுவதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 6ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும்? எப்போது முடிவடையும்? ஆகிய தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்த போது மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ”மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும். அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே  நேரத்தில் சுகாதாரத் துறை அமைச்சகம், மத்திய அமைச்சரவை ஒப்புதல் என அதற்கான ஃபார்மாலிட்டிகள் முடிய எத்தனை மாதங்கள் ஆகும் என தெரியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட குறைந்தது இன்னும் 5 ஆண்டுகளாவது ஆகும் என்றே தெரிகிறது.