விபத்து ஏற்பட்டதுபோல் நடித்து போலீஸ்காரரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை திருவிகநகர் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (53). திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்க்கிறார்.

நேற்று மதியம் பாலசுப்பிரமணி, வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, சொந்த வேலை விஷயமாக ராயபுரம் வழியாக பாரிமுனைக்கு பைக்கில் சென்றார். ராயபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது, ஒரு வாலிபர் விபத்தில் காயமடைந்தது போல் சாலையில் விழுந்து கிடந்தார்.

அதை பார்த்ததும் பாலசுப்பிரமணி, பைக்கை நிறுத்தி கீழே இறங்கினார். மயங்கி கிடந்த வாலிபர்களின் அருகில் சென்றபோது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், பாலசுப்பிரமணியிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து, ராயபுரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், வீடு வாசல் இல்லாமல் சுற்றி திரியும் கார்த்திக் (30) என தெரிந்தது. மேலும், இவரது நண்பர்கள் பட்டினப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டப துப்புரவு ஊழியராக வேலை பார்க்கும் சேலம் ஆத்தூரை சேர்ந்த சதீஷ் (19), திருச்சியை சேர்ந்த டேனியல் (28) மற்றும் 2 பேருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.

மேலும், சாலையில் விபத்தில் சிக்கியதுபோல் விழுந்து, உதவி செய்ய வருபவர்களிடம் நகை, பணத்தை பறிப்பது, திருமண மண்டபத்தில், உறவினர்களின் உடமைகளை திருடுவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.