வள்ளுவர்கோட்டம், சூளைமேடு பகுதிகளில் திருநங்கைகளுக்கு இரவு நேரங்களில் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக 25 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, வள்ளுவர் கோட்டம், சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இரவுநேரங்களில், திருநங்கைகள் சாலையோரம் நின்று, இளைஞர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, அப்பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாலியல் ரீதியாக பொது இடங்களில் யாருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், திருநங்கைகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்ப்டடது.

போலீசாரின் அறிவுரையை ஏற்க மறுத்த திருநங்கைகள், வள்ளுவர்கோட்டம் மற்றும் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் இளைஞர்களை வழிமறித்து பிரச்சனை செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், அதிரடி நடவடிக்கையாக திருநங்கைகளிடம் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்பவர்களை கைது செய்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று போலீசார் நினைத்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் அதிரடியாக வள்ளுவர்கோட்டம் அருகே ரகசியமாக கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளிடம் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (21), கோயம்பேட்டைச் சேர்ந்த வருண்குமார் (22), பாலா (21), ஆறுமுகம் (23), ஆவடியைச் சேர்ந்த சிவக்குமார் (20), சபரிநாதன் (24), கெடுங்கையூரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (22) ஆகியோரை கைது செய்தனர். 

முன்னதாக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் திருநங்கைகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 18 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் இந்த தொடர் நடவடிக்கையால், இரவு நேரங்களில் திருநங்கைகளின் நடமாட்டம் குறைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.