நீலகிரி
 
நீலகிரியில் உள்ள பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த 14 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுப் பகுதிக்கு விரட்டினர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா ஐயங்கொல்லி, தட்டாம்பாறை, மழவன்சேரம்பாடி, முருக்கம்பாடி, கொளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

நேற்று முன்தினம் இரவு ஐயங்கொல்லி மூலக்கடைப் பகுதியில் நான்கு காட்டு யானைகளும், தட்டாம்பாறையில் குட்டிகளுடன் கூடிய எட்டு யானைகளும் முகாமிட்டன.

இதுகுறித்து தகவலறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காவலர் தம்புக்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். அதன்பின்னர் பட்டாசு வெடித்து காட்டு யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

இதேபோல நேற்று மாலை 3 மணி அளவில் சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் எண்.4 பகுதியில் உள்ள காபி தோட்டம் பகுதியில் பத்து காட்டு யானைகள் நுழைந்ததால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காபி தோட்டத்தைவிட்டு காட்டு யானைகள் வெளியேறின. அவையனைத்தும் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டன.