சென்னையில் நாளை நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் நாளை நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணித வினாத்தாள் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 12 ஆம் வகுப்புக்கான உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியாகின. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் நிலையில், வினாத்தாள்கள் அடுத்தடுத்து வெளியாகிவருவது பள்ளிக்கல்வித்துறைக்கு பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாநிலம் முழுவதும் அதே வினாத்தாளைக்ன் கொண்டே தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது நாளை நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியாகியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியான விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 2 தனியார் பள்ளிகளில் இருந்து திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.