தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தது தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக  பலத்த  மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய தென் மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்துள்ளதாகவும, அந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள், அடுத்த இரண்டு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது சத்தீஸ்கர் நோக்கிச் செல்லும் பட்சத்தில் கேரளாவில் மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.