சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாத ஆண் குழந்தையைக் கடத்த முயன்ற தம்பதியை பிடித்து, பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபாகரன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு உடல்நலம் பாதித்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது, வயிற்றில் சதை வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பிரபாகரன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அறுவை சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சோனியா, குழந்தையுடன் இருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை குழந்தை தூங்கி கொண்டிருந்தது. அப்போது சோனியா, கழிப்பறைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பியபோது, படுக்கையில் இருந்த குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

உடனே, அருகில் இருந்தவர்களை கேட்டபோது எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சோனியா, கதறி அழுதபடி மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அனைத்து வார்டுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஒரு தம்பதி வெளியேற முயன்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், பிடித்து விசாரித்தனர். அங்கு சோனியா வந்தபோது, தம்பதியிடம் இருந்தது தனது குழந்தை என உறுதி செய்தார்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குழந்தையை பத்திரமாக மீட்டு, சோனியாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், தம்பதியை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதி எந்த ஊரை சேர்ந்தவர்கள், இதற்கு முன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா, இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர், குழந்தையை கடத்தி யாருக்கு கொடுக்க இருந்தனர் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.