சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று நள்ளிரவில் அரசு பேருந்து ஒன்று கிளம்பியது. அதில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அனுமந்தை சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

சாலையில் பேருந்து தாறுமாறாக சென்றதால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் விழித்து அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தை கட்டுப்படுத்தி நிறுத்த ஓட்டுநர் முயன்றும் முடியாமல் போனது. பின் வேகமாக வந்த பேருந்து சாலையோரம் இருந்த மின்கம்பியில் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து அங்கிருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் உட்பட 20 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கூச்சல் போட்டனர்.

அந்தவழியாக சென்றவர்கள் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக புதுச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!