தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது தாயின் சகோதரி மரிய மைக்கேல். 92 வயது மூதாட்டியான இவர் நிக்கோலஸின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்தநிலையில் மூதாட்டியை முறையாக கவனிக்காத நிக்கோலஸ், அவருக்கு உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் சித்ரவதை செய்துள்ளார். அதுமட்டுமின்றி மூதாட்டிக்கு வீட்டினுள் தங்க இடம் கொடுக்காமல், வீட்டின் பின்புறம் இருக்கும் கழிவறையில் தங்க வைத்துள்ளார்.

அந்த கழிவறையிலேயே இயற்கை உபாதைகளை கழித்து விட்டு அங்கேயே தூங்கி வந்துள்ளார் மூதாட்டி. மேலும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் மூடிபடுப்பதற்கு போர்வை, பாய் கூட கொடுக்காமல் வெறும் தரையில் படுக்க வைத்து நிக்கோலஸ் இரக்கமின்றி செயல்பட்டுள்ளார். கொசுக்கடியிலும், குளிரிலும் மூதாட்டி வதைபடுவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் மூதாட்டியை மீட்டு காவல்நிலையத்தில் அனுமதித்தனர்.

இதையடுத்து சமூகநலத்துறை சார்பாக அளிக்கப்பட்ட புகாரின்படி நிக்கோலஸ் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். வயதான காலத்தில் மூதாட்டியை சரிவர பராமரிக்காமல் கழிவறையில் தங்க வைத்து சித்தரவதை செய்ததாக இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Also Read: குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்..! பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..!