உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஆயிரத்து 71 பேர் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் 29 மக்கள் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடைகள்,வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவசர காலங்களில் மக்களுக்கு உதவும் பேரிடர் மேலாண்மை படை சேலத்தில் களமிறக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு படை வீரர்கள் கிராமங்களில் இருக்கும் தன்னார்வலர்களின் மூலம் தேவை மதிப்பீடு செய்வது, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேவைப்படும் பொருட்களை சமமாக பிரித்து அளிப்பது, நிவாரண மையங்களில் உணவு, உடை, போன்ற அடிப்படை வசதிகளுடன் பொது சுகாதாரம் மற்றும் சுத்தமான இருப்பிட வசதிகளை அளிப்பது, நிவாரண பொருட்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர். 

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு தீவிர நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சேலம் மாநகராட்சி பகுதியில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக திறந்தவெளி சந்தைகள் 8க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உணவு வழங்குவதற்காக உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து தேவையின்றி சாலையில் செல்லும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சேலம் பகுதியில் 10 ஆயிரத்து 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.