மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் முதன் முதலாக தமிழகத்தின் பிரபலமான கோம்பை இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன

. இந்தியாவின் பாரம்பரிய நாய் இனங்களுக்கு பயிற்சி அளித்து அவற்றை மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ப்பது என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முத்தோல் வகையைச் சேர்ந்த நாய்கள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்க்கப்பட்டன. இப்பொழுது கோம்பை நாய் இனத்தைச் சேர்ந்த 2 குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மதுரையில் கோம்பை நாய்களை விற்பனை செய்துவரும் அரவிந்தராஜ் என்பவர் இரண்டு கோம்பை நாய் குட்டிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து அரவிந்தராஜ் கூறுகையில் “ பல ஆண்டு காலமாக நான் கோம்பை நாய்களை வளர்த்து மற்றவர்களுக்கு விற்று வருகிறேன். இப்பொழுது என்னிடம் 30 கோம்பை நாய் குட்டிகள் உள்ளன. கோம்பை நாய் இனத்தை பிரபலப்படுத்துவதுதான் என்னுடைய நோக்கம். மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு மூன்று நாய்க்குட்டிகளை கொடுக்க முடிவு செய்திருக்கிறேன் இரண்டு நாய்க்குட்டிகள் ஏற்கனவே அனுப்பிவிட்டேன் மூன்றாவதாக ஒரு பெண் நாய்க்குட்டியை விரைவில் அனுப்புவேன்” எனத் தெரிவித்தார். கோம்பை நாய் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களில் வளர்க்கப்படுகிறது. 

இந்த நாய்களின் மூக்குப்பகுதி கறுப்பாகவும், இளம் காவி, காப்பி நிறம் கலந்த நிறத்தில் இருக்கும். பாதுகாவல் மற்றும் வேட்டையாடுதல் ஆகிய இரண்டு பணிகளில் கோம்பை நாய்கள் மிக வேகமானவை, கடும் எதிரிகள் வந்தால் கடும் ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் வெளிப்படுத்தி தாக்கும் தன்மை கொண்டவை. கோம்பை நாய் யார் பராமரிக்கிறார்களோ  அவர்களிடத்தில் முழு விசுவாசத்துடன் இருக்கும். அவர் உத்தரவுக்கு மட்டுமே கட்டுப்படும் பெங்களூருவில் உள்ள நாய் நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரிவில் கோம்பை நாய்களுக்கும் பயிற்சி அளிக்க சிஆர்பிஎப் பிரிவு தீர்மானித்துள்ளது.