நேர்மையாக செயல்பட்ட மதுரை ஆட்சியர் நாகராஜன் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

*  இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில்;- மதுரை ஆட்சியராகப் பணியாற்றிய நாகராஜன் தொழில் முனைப்பு வளர்ச்சி நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

* மதுரைக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்படும் வரை மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஆட்சியருக்கான கூடுதல் பணியையும் கவனிப்பார்.

* கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்து வந்த எம். பாலாஜி மாற்றப்பட்டு பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

*  கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த வி. ராஜாராமன் மாற்றப்பட்டு நகர பஞ்சாயத்து திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை ஆட்சியர் மாற்றத்தின் பின்னணி:-

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் அனுமதியில்லாமல் நுழைந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலராக சரியாக செயல்படாத காரணத்தால் ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக, மதுரையில் காலியாக இருந்த 1,500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த இடங்களுக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கி கொண்டு, அவர்களை நியமிக்க வேண்டும் என ஆட்சியருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இந்நிலையில் இரவோடு இரவாக அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் பணி ஆணை வழங்கியதால் ஆட்சியர் எஸ்.நகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.