சீனாவில் உருவான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி, சர்வதேசத்தையே அச்சுறுத்திவருகிறது.  உலகம் முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 

இந்தியாவில் கொரோனாவால் 550க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா இன்னும் பொதுச்சமூகத்தில் பரவவில்லை என்பதால், பொதுச்சமூகத்தில் பரவாமல் தடுக்க, இன்று முதல் இன்னும் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. 

இந்தியாவில் கொரோனாவால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 40ஐ நெருங்கிவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டதால் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். ஒருவர் டெல்லியிலிருந்து வந்தவர். ஒருவர் மட்டுமே வெளியூருக்கோ வெளிநாட்டிற்கோ செல்லாமல் மதுரையிலே இருந்தவர். 54 வயதான அந்த மதுரை நபர் தான் உள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபராக இருந்தார்.


ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொரோனாவாலும் பாதிக்கப்பட்டதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்துள்ளார். 

மும்பையிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே ஏற்கனவே 9ஆக இருந்த கொரோனா பலி, தற்போது 11ஆக உயர்ந்துள்ளது.