விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(31). வழக்கறிஞர் தொழில் பார்த்து வந்துள்ளார். இவர் தென்காசி அருகே இருக்கும் குற்றாலத்திற்கு தனது நண்பர்களுடன் செல்ல முடிவெடுத்தார். அதற்காக ஒரு காரில் முத்துக்குமார், ஐயப்பன் (33), அந்தோணிராஜ் (30), பிரபு ஆகியோர் புறப்பட்டனர். காரை சுடலை மணி என்பவர் ஓட்டி வந்தார். நேற்று குற்றாலம் சென்ற அவர்கள் அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்தனர். பின் மீண்டும் அதே காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ராஜபாளையம் அருகே இருக்கும் கடம்பன்குளம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தென்காசி நோக்கி வேன் ஒன்று வந்தது. எதிர்பாராத விதமாக காரும் வேனும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கி அதில் பயணம் செய்த சுடலைமணி, முத்துக்குமார், ஐயப்பன், அந்தோணிராஜ் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இடிபாடுகளில் சிக்கி பிரபு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தீயணைப்பு படையினரின் உதவியுடன் பிரபுவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவரும் உயிரிழந்தார்.  உயிரிழந்தவர்களின்  உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வேனில் வந்தவர்களில் 5 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read:'கலெக்டர்ல இருந்த எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!