Asianet News TamilAsianet News Tamil

ஒத்த அரிசியை வெச்சுகிட்டு, மொத்த உசுரையும் கையில பிடிச்சுகிட்டு, புயல் காத்துல மூவாயிரம் கிலோமீட்டர் கடல் வழியா தப்பினோம்: கன்னியாகுமரி மீனவர்களின் கண்ணீர் கதை

இந்த நாட்டில் வெறும் நடிப்புக்காக கோடான கோடி சம்பாதிக்கிறார்கள் சினிமா நடிகர்கள். விடிந்தால், பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு இழுத்து மூடி தூங்கும் காஸ்ட்லி பெட்ஷீட் வரை அந்தந்த பட தயாரிப்பாளர்களின் பணத்திலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது. செலவே இல்லாமல் அப்படியே சுளையாக சேமிப்புக்கு போகும் கோடிகளில் அவர்களின் குடும்பம் செழித்து வளர்கிறது. இத்தனைக்கும் இந்த சினிமா என்று ஒன்று இல்லை என்றால் குடி மூழ்கி போயிடாது. 
 

kanyakumari fisher man tear story
Author
Kanyakumari, First Published Dec 9, 2019, 6:15 PM IST

இந்த நாட்டில் வெறும் நடிப்புக்காக கோடான கோடி சம்பாதிக்கிறார்கள் சினிமா நடிகர்கள். விடிந்தால், பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து இரவு இழுத்து மூடி தூங்கும் காஸ்ட்லி பெட்ஷீட் வரை அந்தந்த பட தயாரிப்பாளர்களின் பணத்திலேயே இவர்களின் வாழ்க்கை கழிகிறது. செலவே இல்லாமல் அப்படியே சுளையாக சேமிப்புக்கு போகும் கோடிகளில் அவர்களின் குடும்பம் செழித்து வளர்கிறது. இத்தனைக்கும் இந்த சினிமா என்று ஒன்று இல்லை என்றால் குடி மூழ்கி போயிடாது. 

kanyakumari fisher man tear story

ஆனால், கடல் உணவு என்ற ஒன்று இல்லையென்றால் பல கோடி மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும், பலப் பல லட்சக்கணக்கான  குடும்பங்களின் வயித்துக்கு  சோறு இருக்காது. அந்த வகையில் மீனவர்கள் இந்த தேசத்தில் பெரும் மதிப்பிற்குரியோர் ஆகின்றனர். ஆனால் அவர்களின் பிழைப்பானது பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்று கேட்டால் இல்லை, இல்லவே இல்லை என்றே பதில். 

உள்நாட்டு முதலாளிகளிடம் நாய் போல் உழைத்து வேலை  பார்த்தாலும் கிடைக்காத பணம், வெளிநாடுகளுக்கு சென்றால் கிடைக்கும்! என்று நம்பி பல மீனவர்கள்  கடல் தாண்டி பறக்கின்றனர். ஆனால் அதில் முக்கால்வாசி பேர் ஏமாற்றப்படுதல், தாக்கப்படுதல், கொல்லவும் படுதல் எனும் கொடுமைக்கு ஆளாகின்றனர். 

kanyakumari fisher man tear story

இப்படித்தான்  ஓமன் நாட்டில் மீன் பிடி வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி கன்னியாகுமரியிலிருந்து ஏழு மீனவர்களும், கேரளாவிலிருந்து இரண்டு மீனவர்களுமாக மொத்தம் ஒன்பது பேரை கடந்த ஆண்டு விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார் அப்துல்லா எனும் நபர். அந்த நாட்டில் போய் இறங்கி, ஒரு முதலாளியிடம் வேலைக்கு சேர்ந்திருக்கின்றனர். படாதபாடு பட்டு உழைத்தும் சம்பளம் கிடைக்கவில்லை. பின் அங்கிருக்கும் கடலோர பாதுகாப்பு படையினரிடம் புகார் சொன்னபோதுதான் தெரிந்திருக்கிறது, அது ஓமன் நாடு இல்லை ஏமன் நாடு! என்று. 

இதனால் ஒன்பது பேரும் சேர்ந்து, மீன் பிடிக்க தங்களுக்கு முதலாளி கொடுத்த படகிலேயே இந்தியாவுக்கு தப்பிட முடிவு செய்திருக்கின்றனர். ஏதோ ஒரு த்ரில்லர் மூவியின் கிளைமேக்ஸ் போல் நடந்திருக்கிறது அந்த ‘எஸ்கேப் சாகசம்.’. 

பிரபல வாரம் இருமுறை அரசியல் புலனாய்வு புத்தகத்தில் அதை விவரித்திருக்கும் அம்மீனவர்களில் ஒருவரான நியூட்டன்...

kanyakumari fisher man tear story

“பிழைச்சால் ஊர் போயி சேருவோம், செத்தால் மீனுக்கு இரையாவோம்! எதுவானாலும் கடல்தாயின் கையில் அப்படின்னு கடல் மாதா மேலே பாரத்தை போட்டுட்டு எஸ்கேப் பிளானை போட்டோம். ஏமன் முதலாளி கொடுத்திருந்த படகு எங்க கையில் இருந்துச்சு. ஆனால் அங்கே இருந்து இந்தியாவுக்கு தப்பிக்க சில ஆயிரம் கடல் மைல் கடக்கணும், அதுக்கு சில ஆயிரம் டீசல் தேவை. அதை வாங்குறதுக்கு பணமே கிடையாது. ஏன்னா அந்த முதலாளி எங்களை அடிமை நாயாட்டமாதான் வெச்சிருந்தார்.
 
அதனால ஒவ்வொரு முறையும் அவர் எங்களுக்கு மீன் பிடிக்க கடலுக்கு போறதுக்கு கொடுக்குற நாலாயிரத்து ஐநூறு லிட்டர் டீசலில், அவருக்கே தெரியாம ஐநூறு லிட்டர் மிச்சம் பிடிச்சோம். ஆறுதடவை இப்படி மிச்சம் பிடிச்சதுல மூவாயிரம் லிட்டர் தேறுச்சு. எங்க மனசுல தெம்பு வந்து, எஸ்கேப் ஆகிட நாள் குறிச்சோம். 

ஒரு முறை அவர் கொடுத்த நாலாயிரத்து ஐநூறு லிட்டரை அப்படியே எஸ்கேப்புக்கு எடுத்துக்கிட்டோம், ஆக கையில் ஏழாயிரத்து ஐநூறு லிட்டர் டீசல் இருந்துச்சு.  முதலாளிக்கு சந்தேகமே வராம, ஏதோ மீன் பிடிக்க போற மாதிரியே போட்டை எடுத்துக்கிட்டு கிளம்புனோம். போன நவம்பர் 19-ம் தேதி எஸ்கேப்பாகி கிளம்புனோம். 

ரெண்டு பேர் படகு ஓட்டுறப்ப, ஏழு பேர் தூங்குவோம். அப்புறம் ரெண்டு பேர் ஓட்டுவோம். ஒவ்வொரு தடவையும் மீன் பிடிக்க கிளம்புறப்ப அவர் எங்களுக்கு கொடுக்குற அளவான சமையல் சாமான் ரெண்டு மூணு நாள்ள தீர்ந்துடுச்சு.  பிறகு சாப்பிடுறதுக்கு சமையல் ச் செய்ய சாமான் எதுவும் கிடையாது, நாங்க கள்ளத்தனமா சேர்த்து வெச்ச வெறும் அரிசி மட்டும்தான் இருந்துச்சு. அந்த ஒத்த அரிசியை வெச்சுக்கிட்டு, கஞ்சி காய்ச்சி காய்ச்சி குடிச்சுட்டு ஓட்டுனோம். தொட்டுக்க வெறும் பச்ச மிளகா மட்டும்தான் இருந்துச்சு. 

kanyakumari fisher man tear story

பல இடங்கள்ள கடல்ல கொடூரமா காத்து வீசி, படகு கவிழ்ற மாதிரி ஆடுச்சு. ஆனாலும் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ஓட்டுனோம். சில நேரங்கள்ள ‘செத்தோம்லே’ன்னு நினைச்சு, தப்பிச்சோம். ஒருவழியா நவம்பர் இருபத்து ஏழாம் தேதி லட்சத்தீவுக்கு வந்துட்டோம். மொத்தம் மூவாயிரம் கிலோமீட்டர் கடந்து தப்பிச்சு வந்திருந்தோம். டீசலும் காலி, அப்படியே படகுல கெடந்தோம். அப்புறம் அங்கேயிருந்து கெஞ்சி கூத்தாடி சிலரோட கால்ல விழுந்து, சொந்த ஊருக்கு தகவல் கொடுத்தோம். 

இந்த நேரத்துல கேரளா கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான குட்டி விமானம் எங்களை பார்த்து, பாதுகாப்பு படைக்கு தகவல் சொல்லிடுச்சு. அடுத்த ரெண்டு நாள்ள கடலோர பாதுகாப்பு படை கப்பல் எங்களை காப்பாத்துச்சு. 

மீனுக்கு இரையா போயிருக்க வேண்டிய பயக நாங்க, கடல் மாதாவோட கருணையால இப்ப குடும்பத்தோடு ஐக்கியமாகி இருக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் எங்களுக்கு நிச்சயம் புது வாழ்வு கிறிஸ்துமஸ்தான்.” என்றிருக்கிறார். 
கடல் மாதாவுக்கு நன்றி!

Follow Us:
Download App:
  • android
  • ios