குமரி அருகே கல்லூரி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி மாணவ-மாணவிகள் ஏற்றிக்கொண்டு தனியார் கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த கல்லூரி பேருந்து ராஜாக்கமங்கலம் அருகே வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதியது. 

விபத்து நடந்ததும் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகள் ஆசிரியைகளும் படுகாயமடைந்து அலறினர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை உள்ளிட்ட 18 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உடனே ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.