வெப்பசலனம் காரணமாக தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்கிறது.

இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று பலத்த மழை பெய்து வருவதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.