கோயமுத்தூர் அருகே இருக்கிறது ராமநாதபுரம். இங்கிருக்கும் நஞ்சுண்டாபுரம் சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அதில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கழிவறைக்குள் நல்லபாம்பு ஒன்று படமெடுத்து ஆடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் கழிவறைக்கு நள்ளிரவு 1 மணியளவில் பெண் ஒருவர் சென்றுள்ளார். அங்கு கதவை அவர் திறந்த போது நாகப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்திருக்கிறது. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து அலறியிருக்கிறார். அவரை கண்டதும் சுருண்டு கிடந்த நல்லபாம்பு, படமெடுத்து சீறியிருக்கிறது. அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் திரண்டு வந்தனர். பின் பாம்பு கழிவறையில் இருந்து வெளிவராத வண்ணம் வெளிப்புறமாக பூட்டப்பட்டது.

உடனடியாக பாம்பு பிடிக்கும் நபரான உக்கடத்தைச் சேர்ந்த ஸ்நேக் அமின் என்னும் வாலிபருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரை பாம்பு தீண்ட பார்த்திருக்கிறது. அதையும் மீறி 6 அடி நீள நல்லபாம்பை அவர் லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டு கட்டினார். அதன்பிறகே அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். பாம்பு புகுந்த கழிவறை மேற்கித்திய வகையைச் சேர்ந்ததாகும். கழிவறையின் மேல்பகுதி மூடியிருந்ததால் பாம்பு அதனுள் புகாமல் வெளியேவே சுற்றி வந்துள்ளது. 

ஒருவேளை அது உள்ளே சென்றிருந்தால் அங்கிருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பாம்பை பத்திரமாக கொண்டு அங்கிருக்கும் வனப்பகுதியில் அமின் விட்டுள்ளார்.