சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் படித்து வந்த நைஜீரிய மாணவன் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் நைஜீரியா, மலேசியா, இந்தோனேசியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

 இந்நிலையில், நைஜீரியாவை சேர்ந்த விக்டர் (25) என்பவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவன் விக்டர். தனது சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் அறையில் தங்கியிருந்தார். 

இந்நிலையில், நைஜூரியாவில் உள்ள விக்டரின் தாய் இரவு அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் விக்டர் போனை எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர் மகனின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். இதையடுத்து அந்த நண்பர் விட்டு அறைக்கு சென்று கதவை தட்டியபோது நீண்ட நேரமாக கதவு திறக்கவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியா பார்த்த மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து உடனே மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விக்டர் இறந்த நிலையில் இருந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக எஸ்ஆர்எம். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.