தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் பெண்ணை கத்தியால் தாக்கியதாக சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதன் தரைதளத்தில் சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுநர் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். குடியிருப்புவாசிகள் லாரியில் குடிநீரை விலைக்கு வாங்கி அதற்கான தொகையை பங்கிட்டுக் கொண்டு, தேவைக்கு ஏற்ப சம்பில் இருந்து சுழற்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்ணீர் வராததால், குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது அங்கு வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ‘‘தண்ணீர் இல்லையென்று நீ எப்படி தன்னிச்சையாக மோட்டாரை இயக்கலாம்,’’ என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மோகனின் மனைவி சுபாசினி (28), ‘‘எப்படி எனது கணவரை அடிக்கலாம்,’’ என்று கேட்டுள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ‘‘நான் யார் தெரியுமா, என்னையே எதிர்த்து பேசுவியா,’’ என்று கேட்டு ஆபாச வார்த்தைகளில் திட்டியதுடன், தனது வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுபாசினி முகத்தில் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த சுபாசினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவரது தாடையில் 6 தையல்கள் போடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.